إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ

...எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. ..." (அல்குர்ஆன் 13:11)

அணுகுமுறை

இஸ்லாமிய வாழ்க்கை முறையை அல்லாஹ்வின் பூமியில் நிலைநாட்ட தொலைநோக்குடனும், தெளிவான திட்டம் மற்றும் கடும் முயற்சியுடனும் செயல்படும் இலட்சியக் குழு தேவைப்படுகிறது. இக்குழு எண்ணத் தூய்மையுடன், இம்மனித சமுதாயத்தின் மீது கவலை கொண்டவர்களாக, அல்லாஹ்வை சார்ந்து வாழ்பவர்களாக, பொறுமை மற்றும் நிலைகுலையாமையுடன் களத்தில் இறங்கிட வேண்டும். இத்தகைய குழுவை எவ்வாறு உருவாக்குவது? நபிகள் நாயகம்(ஸல்) எவ்வாறு  இலட்சியக் குழுவை உருவாக்கினார்கள்.

ஹீரா குகையிலிருந்து சத்திய தூது கிடைத்தவுடன் அண்ணலார்(ஸல்) மக்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் பணியினை துவக்கினார்கள். பணியின் துவக்கமாக வீட்டில் அன்னை கதீஜா(ரலி) அவர்களையும், நண்பர்களில் அபுபக்கர்(ரலி) அவர்களையும், உறவினர்களில் அலி(ரலி) அவர்களையும், அடிமைகளில் ஸைத் பின் ஹாரிஸா(ரலி) அவர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். சத்திய தூதை எடுத்துரைத்து, பயிற்சி அளிக்கிறார்கள். இச்சிறிய குழு தனக்கு நெருக்கமானவர்களுக்கு சத்திய நெறியை எடுத்துரைக்கிறது. இவ்வாறாக உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) போன்ற உத்தமர்கள் இலட்சியக் குழுவில் இணைந்து நபியிடம் பயிற்சி பெறுகிறார்கள்.

எனவே, ஓர் இலக்கு நோக்கிய பயணத்திற்கு தேர்வு செய்து பயிற்சி அளித்தல் நபி வழியாகும் என்பதை நன்கு உணரலாம். இத்தகைய பயிற்சி பெற்றவர்கள்தான் இறைவழியில், நபிவழியில் நிலைத்திருப்பார்கள். இதன் துவக்கம் மிக குறைந்த எண்ணிக்கையில் இருக்கலாம். ஆனால் இத்தகையவர்கள் தங்களது இலக்கு மற்றும் சத்தியப் பாதையில் என்றும் நிலைத்திருப்பார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம் சமுதாயம் குறிப்பாக இந்திய துணைகண்டத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் இலக்கு அறியாத, பயிற்சி பெறாத வாழ்க்கையாகும். இச்சவாலை சமுதாய அறிவு ஜீவிகள், உலமாக்கள் முறியடிக்க வேண்டுமானால், தங்கள் தங்களது பகுதிகளில் சமுதாய சகோதர, சகோதரிகளை தேர்வு செய்து பயிற்சி வகுப்புகளை நடத்திட ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும். தேர்வு செய்த மக்களுக்கு தொடர் பயிற்சி அளித்திடல் வேணடும். எந்தவித ஆரவாரமும், பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தொலைநோக்குடன் திட்டமிட்டு, பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வின் தீனை சரிவர புரிந்து, அதன்படி தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் ஓர் இலட்சியக் குழு உருவாகாத வரை நமது வீடுகளிலும், கிராமங்களிலும், நகரங்களிலும் எந்த வித உண்மையான மாற்றம் எற்படாது என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) உலகில் மறுமலர்ச்சி மற்றும் நீதத்தை நிலைநாட்ட தங்களது தோழர்களைக் கொண்டு தலைசிறந்த இலட்சியக் குழுவை உருவாக்கிய காரணத்தினால்தான் இஸ்லாம் மதினாவிலிருந்து துவங்கி உலகம் முழுவதும் பரவியது. உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைவதன் மூலம் இஸ்லாம்  வலுப் பெற பிராரத்தனை செய்ததும் இதற்காகவே.

ஆகவே:

  • தாங்கள் வசிக்கும் பகுதியில் 10 முதல் 15 சகோதரர்களை தேர்வு செய்யுங்கள்.
  • வாரம் ஒருமுறை குறைந்தது 02 மணி நேரத்திற்கு ஓர் அமர்வை ஏற்பாடு செய்து படிப்படியாக கல்வி மற்றும் மார்க்க தெளிவை வழங்குங்கள்.
  • இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 75 தலைப்புகளை அதே வரிசையில் வாரம் ஓர் தலைப்பாக விளக்குங்கள்.
  • தலைப்பை விளக்கிய பின், பங்கு கொண்ட சகோதரர்களின் கருத்துக்களையும், எத்தகைய சிந்தனை மற்றும் செயல் மாற்றத்துடனும், முன்னேற்றத்துடனும் அமர்வின் இறுதியில் விடை பெற இருக்கின்றீர்கள் என்பதை கேட்டு அறியுங்கள்.
  • குழுவில் இணைந்துள்ள 10 – 15 சகோதரர்களுடன் நிகழ்ச்சிக்கு பின்பும் தனிப்பட்ட தொடர்புகளை வலுவாக்குங்கள்.
  • நாம் அனைவரும் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்ட பாடுபடும் இலட்சிய குழுவாக மாறவேண்டும், அதற்காகத்தான் இந்த தொடர்ந்த திட்டமிட்ட பயிற்சி வகுப்புகள் என்பதை உரிய சந்தர்ப்பங்களில் நினைவூட்டுங்கள்.
  • இவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யுங்கள்.

பள்ளி இமாம்கள், ஆலிம் பெருமக்கள், ஆசிரியர்கள், சமுதாய பிரமுகர்கள் போன்றவர்கள் இத்தகைய அணுகுமுறையை தங்களது பகுதிகளில் மேற்கொண்டால் ஓர் சிறந்த இலட்சிய குழுவை உருவாக்கலாம்.

இவ்வாறாக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சிலர் மார்க்க கல்வி மற்றும் பயிற்சி பெற்று தங்கள் வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் வாழும் மக்களுக்கு மார்க்கத்தை கற்பித்தால் அறியாமை நீங்கும், இறைகருணை அரவணைக்கும். கொஞ்சம், கொஞசமாக அல்லாஹ்வின் மார்க்கம் செயல்களில் பிரதிபலிக்க துவங்கும். இறுதியாக தீன் சமுதாயத்தில் நிலைநாட்டப்படும்.

எண்ணங்கள் நிறைவேற இறை உதவி கோருவோம்.


உங்கள் சிந்தனைக்கு:

ஓர் உழவனைப் போல்

சீர்திருத்த பணிக்கான செயல் திட்டத்தின் அடிப்படையே இதுதான்: எவர் எந்த வட்டத்தில் எந்த பகுதியில் பணி புரிகிறாரோ அவர் அங்கு கட்டுக்கோப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தன் உழைப்பு இறுதி இலக்கை எட்டும் வரை அவர் நிம்மதி அடைந்து விடக்கூடாது.

வானத்தில் பறக்கும் பறவைகள் போல அல்லது காற்றின் சுழல்கள் போல விதைகளை அங்குமிங்கும் வீசிக்கொண்டு செல்வது சரியானது என்று நாம் நம்பவில்லை. இதற்கு நேர்மாறாக ஓர் உழவனைப் போல நாம் பணிப் புரிய விரும்புகிறோம்.

உழவன் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கிறான். பிறகு பூமியை பக்குவப்படுத்துவதிலிருந்து மகசூலை அறுவடை செய்யும் வரை தன் பணியை தொடர்ந்து படிப்படியாக செய்து கொண்டே போகின்றான். தன் உழைப்பு ஓர் இறுதி இலக்கை அடையும் வரை அவன் நிம்மதி அடைவதில்லை. முதல் வழிமுறையின் விளைவாக காடுகள் தோன்றுகின்றன. இரண்டாவது வழிமுறைகள் காரணமாக வயல்களும் சோலைகளும் உருவாகின்றன. 

-  மௌலானா மௌதூதி ( ரஹ் )


Back