நோக்கமில்லாமல் எதையும் இறைவன் படைக்கவில்லை.
நாம் இந்த வானத்தையும் பூமியையும் அவற்றிக்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக படைக்கவில்லை. (21:16), (44:35)
நாம் இந்த வானத்தையும் பூமியையும் அவற்றிக்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை.(38:27)
நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருத்தீர்களா,என்ன? (23:115)
மாறாக
நாம் இந்த வானங்களையும்,பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்தின் அடிப்படையிலேயே அன்றி படைக்கவில்லை(15:85)
நாம் இந்த வானங்களையும்,பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்திற்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துடனும் படைத்திருக்கின்றோம் (46:03)
விளக்கம்:
இறைவன் இவ்வுலகில் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். எல்லாவிதமான நற்பேறுகளையும், அருட்கொடைகளையும் அவனுக்கு கொடுத்திருக்கிறான். ஆக அனைத்தையும் மனிதனுக்காகப் படைத்த அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் நோக்கத்தைப் பற்றிக் கூறும் போது 'மனிதனையும்,ஜின்களையும் என்னை வணங்குவதற்காகப் படைத்தேன்" (51:56) என்கிறான். எனவே நம்மைப் படைத்து இவ்வுலகில் வாழ வைத்ததன் நோக்கமே இறைவனை வணங்கி,அவனது திருப்தியைப் பெற்று மறுமையில் வெற்றியடைவதுதான். ஆனால் நாம் இந்த நோக்கத்தை மறந்து விடுகிறோம். மறுமையில் வெற்றி அடைவதற்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம்,எவற்றை சேமித்து வைத்திருக்கிறோம் என்பதை ஒவ்வொருவருமே சிந்தனை செய்து கொள்வது நல்லது.
அல்லாஹ் தன் திருமறையில், 'இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும்,நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கினறான்" (59:18) எனக் கூறுகிறான்.
இவ்வுலகில் ஒருவன் தன் வாலிப வயதில் உழைத்துப் பொருளீட்டினால் அவனது முதுமைக் காலத்தில் அது அவனுக்கு உதவியாக இருக்கும். அப்படி அவன் உழைத்து வாழ்வாதாரங்களைத் தேடவில்லையெனில் முதுமைக் காலத்தில் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையேற்படும். இது போலவே மறுமைக்காக நாம் ஒன்றும் சேமித்து வைக்கவில்லையெனில் மறுமையில் நாம் பெரிதும் வருந்தவேண்டிய நிலையேற்படும். அப்போது அங்கே உதவி செய்வோர் யாருமிருக்கமாட்டார்கள். எனவே நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் இதுவரை நாளை மறுமைக்காக எதைச் சேர்த்து வைத்திருக்கிறோம்?. இனிமேல் எவற்றைச் சேமித்து வைக்கப்போகிறோம்? என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் செல்லப் போவது சுவனப் பூஞ்சோலையா? அல்லது நரகப் படுகுழியா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாளை மறுமை என்பது நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு மிகக் கடுமையானதாக இருக்கும். அந்நாளில் யாரும் எவருக்கும் உதவி செய்யமுடியாது. ஒவ்வொருவரும் தங்களை நரகத் தீயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் அந்நாளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, 'அந்நாளில் தன் சகோதரனையும், தாயையும் தந்தையையும், தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டு மனிதன் வெருண்டோடுவான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!" (80:34 ,35 ,36 ,37) எனக் கூறுகிறான்.
இந்த உலகில் இந்த உறவுகளுக்காக மனிதன் எவ்வளவு கஷ்டப்படுகிறான். கடுமையாக உழைத்துப் பொருளீட்டி அவர்களுக்குக் கொடுக்கிறான். அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்படுகின்ற போது அவன் துடித்துப் போகின்றான். அந்த துன்பத்தை நீக்குவதற்கு அவன் பாடுபடுகிறான். ஆனால் நாளை மறுமையில் இப்படிப்பட்ட உறவுகளை விட்டும் அவன் வெருண்டோடுவான். அந்த அளவிற்குக் கடுமையானது அந்த நாள். எனவே இன்று மறுமைக்காக எந்த அளவு கஷ்டபடுகிறோமோ அந்த அளவு நாளை மறுமையில் ஈடேற்றம் கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் 'இந்த உலகம் மறுவுலகின் விவசாய நிலம்" என்றார்கள். இங்கே எதை நாம் விதைக்கிறோமோ அதைத்தான் நாளை அறுவடை செய்வோம். எடுத்துக்காட்டாக,நிலத்தைப் பண்படுத்தி நல்ல விதைகளை விதைத்து,உரமிட்டு, நீர்ப் பாய்ச்சி, களைகளைப் பிடுங்கி நன்றாக பராமரித்து வந்தால் அது அமோக விளைச்சலை தரும். இதைப் போலவே நாம் நன்மைகளைச் செய்தால் அதற்குப் பகரமாக சுவனம் செல்வோம். இல்லையெனில் நரகம்தான் கிடைக்கும்.
இவ்வுலக வாழ்க்கையென்பது அற்ப சொற்பகாலம்தான். ஆனால் மறுமையோ நிலையானது. மிகச் சிறந்தது. அழியக் கூடிய இவ்வுலக வாழ்க்கையிலிருந்து நிரந்தர வாழ்க்கையின் பக்கம் செல்வதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும். மறுமையில் சுவன வாழ்க்கையை அடைந்தவர்கள் நற்பேறு பெற்றவர்கள். சுவனத்தில் அவர்களுக்கு வேண்டியது கிடைக்கும். எவ்விதமான கஷ்டங்களோ,நஷ்டங்களோ கிடையாது. அந்த மறுமை வெற்றியை நோக்கமாகக் கொண்டு நாம் இங்கே வாழ முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் நம்முடைய ஆயுள் காலம் மிகக் குறைவானதே. ஒவ்வொரு நாள் முடிகிறபோதும் நம் ஆயுள் காலம் குறைந்து வருகிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
இறைவன் நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்திருக்கிறான். எது நல்லது? எது கெட்டது? என்பதைப் பிரித்தறியும் ஆற்றலைத் தந்திருக்கிறான். இதைப் புரிந்து கொண்டு நாம் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
இவ்வுலக வாழ்க்கை ஒரு சோதனைக்களம்தான். அல்லாஹ் தன் திருமறையில், 'அவன் மரணத்தையும், வாழ்வையும் ஏற்படுத்தினான்,உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக் கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்"(67:02) எனக் கூறுகிறான். எனவே இறைவன் வைத்த சோதனையில் நாம் வெற்றி பெற வேண்டும்.
இறைவன் நமக்கு அதற்குரிய வழியைக் காட்டிவிட்டான். நாம்தான் அதில் செல்லவேண்டும். 'நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்."(76:03) என திருமறையில் மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான். இன்னோர் வசனத்தில், 'நன்மை,தீமை ஆகிய இருவழிகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்" (90:10) எனக் கூறுகிறான். ஆக இறைவன் தெளிவாக எது நல்வழி என்பதைக் காட்டிவிட்டான். இதற்குப் பிறகும் நாம் அவன் காட்டிய வழியில் செல்லாமல் இருந்தால் இவ்வுலகிலும்,மறுவுலகிலும் நமக்குதான் இழப்பு!.
இவ்வுலக வாழ்வு வெகு விரைவில் முடிவடையக் கூடியது. மறுமை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான், 'இதோ அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது."(16:01) எனவே மறுமை வருவதற்கு முன் அதற்குண்டான தயாரிப்பில் இறங்கவேண்டும். இவ்வுலகில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதைப் பற்றி நாளை மறுமையில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவரை அந்த இடத்தை விட்டு ஒர் அடி கூட நகரமுடியாது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:நாளை மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு மனிதன் பதில் சொல்லாத வரையில் அவன் அந்த இடத்தை விட்டு நகர முடியாது.
- தனது வயதை எந்தச் செயல்களில் கழித்தான்?
- தன் இளமையை எதில் பயன்படுத்தினான்?
- செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்?
- எவ்வாறு செலவழித்தான்?
- கற்ற கல்வியின்படி எந்த அளவுக்குச் செயல் புரிந்தான்?
(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் நூல்: திர்மிதி)
இந்த ஐந்து கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நாம் கொஞ்சம் கூட மறுமையில் முன்னேறமுடியாது. இது போலவே எல்லா வணக்க வழிபாடுகளும் இந்தச் சிந்தனையைத்தான் நமக்குத் தருகிறது. எல்லா செயல்களுமே இறைவனுக்குத் தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய எல்லா செயல்களையுமே இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இறைவன் இறைமறையில் கூறுகின்றான், 'நாம்தான் மனிதனைப் படைத்தோம். அவன் உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்"(50:16). நம் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அவன் அறிகிறான் என்ற எண்ணம் நம்முடைய செயல்களிலும் பிரதிபலிக்கவேண்டும்.
நம்முடைய வாழ்க்கை முழுக்க,முழுக்க குர்ஆன்,ஹதீஸ் ஆகியவற்றின் வழியிலேயே இருக்கவேண்டும். ஆனால் பரிதாபமான சூழ்நிலை! குர்ஆனுக்கும், நம் வாழ்விற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் நாம் வாழ்கிறோம்.
நம் வாழ்க்கை குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதற்கும் மறுமையில் நாம் வெற்றியடைவதற்கும் வழி என்ன? முதலில் நாம் இறைவனின் அருளை விட்டும் நிராசையடைந்துவிடக் கூடாது.
அல்லாஹ் திருக்குர்ஆனில், '(நபியே)கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவான்" (39:53) எனக் கூறுகிறான்.
இந்த மன்னிப்புக் கிடைக்கவேண்டுமென்றால் நாம் என்ன செய்யவேண்டும்?
அல்லாஹ் திருக்குர்ஆனில், 'திரும்பிவிடுங்கள்,உங்கள் இறைவனின் பக்கம்,மேலும் அடிபணிந்து விடுங்கள் அவனுக்கு, உங்கள் மீது வேதனை வருவதற்கு முன்பாகவே. பிறகு எங்கிருந்தும் உங்களுக்கு உதவி கிடைக்காது" எனக் கூறுகிறான்.
எனவே வாழ்க்கையின் நோக்கம்
இறைவனுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து, இறை நாட்டப்படியான உலக அமைப்பை நிலைநாட்டுவதற்கு செய்யும் முயற்சி, உழைப்பு, போராட்டம் ஆகியன மூலமாக மறுமை வெற்றியடைவதுதான்.
அதற்காக நாம் முயற்சி எடுக்க வேண்டும். அது பற்றிய கல்வியறிவை அவசியம் தேடவேண்டும். இது போன்ற விசயங்களில் ஈடுபடும் சகோதரர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஆக நம் வாழ்க்கை முழுக்க, முழுக்க இஸ்லாமிய மயமாகி விட வேண்டும். அப்படி உண்மை முஸ்லிமாக நாம் ஆகின்ற போது நாளை மறுமை வெற்றியென்பது நிச்சயம் நமக்குண்டு. அத்தகைய நற்பேற்றை அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்தருள்வானாக!. ஆமீன்.
ஆம் வாழ்க்கைக்கு நோக்கம் உண்டு
- நோக்கம் நிறைவேறாமல் இறந்துவிட்டால் பெரும் நஷ்டத்தில் வீழ்ந்துவிடுவோம்.
- நாம் ஜின்களையும்,மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை.(51:56)
- அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணியவேண்டும்.
- அனைத்து விவகாரங்களும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கேற்ப நிறைவேற்றவேண்டும்.
வாருங்கள் இனி நோக்கத்துடன் வாழ்வோம். வாழ்க்கையின் நோக்கத்தை அறிய நாம் அணுக வேண்டிய ஆதாரபூர்வமான நூல் எது?
இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வில்.
Back