தீன் என்ற சொல்லுக்கு வாழ்க்கை நெறி என்று பொருள். தனி மனிதன் மற்றும் சமூகத்தினுடைய வாழ்வு நெறி, சிந்தனை பாங்கு, நடைமுறை ஆகியவற்றைக் குறிப்பதுதான் தீன் என்ற சொல். இத்தகைய வாழ்க்கை நெறியின் பெயர்தான் இஸ்லாம் என்பதாகும்.
إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الإِسْلَـمُ
"திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி (தீன்) ஆகும்" (03:19)
நம்மை படைத்து நமது அனைத்து வாழ்க்கைத் தேவைகளையும் வழல்ங்கிய அல்லாஹ்தான் 'தீன்' என்னும் வாழ்க்கை நெறியையும் கொடுத்தான். இதன் மூலம் அமைதியான இம்மை வாழ்க்கை வாழவும், மறுமையில் வெற்றி பெறவும். திருக்குர்ஆனின் வழிகாட்டலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கிகாரமும்தான் இவ்வாழ்க்கை நெறியின் மூல ஆதாரங்கள். இதன் மூலம் நமது இம்மை வாழ்வு அமைதியானதாகவும், மறுமை வாழ்வு வெற்றியானதாகவும் அமையும்.
'தீன்' என்னும் வாழ்க்கை நெறி முழுமையானது. மனித சமுதாயத்திற்க்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களும் இதில் அடங்கும். அல்லாஹ் கூறுகிறான்: 'இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்-வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டேன்' (05:03)....
'தீன்" என்னும் வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்பவர்கள் மட்டுமே மறுமையில் இறை அருளையும், சொர்க்கத்தையும் பெறுவார்கள்.
"அல்லாஹ்வை பணிந்து வாழும் போக்கினை (இஸ்லாத்தை) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து ஒரு போதும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டடைந்தவரில் ஒருவனாக இருப்பான்" (03:85)
நபிமார்களின் வருகையின் நோக்கமே இறைவன் அங்கிகரித்த வாழ்க்கை நெறியை இவ்வுலகில் நிலைநாட்டுவதே. இறுதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) தங்களது 23 ஆண்டு தூதுத்துவ காலத்தில் தீன் என்னும் வாழ்க்கை நெறியை 'வஹி" என்ற வேத வெளிபாட்டின் மூலம் இறைவனிடமிருந்து பெற்று முழுமையாக நிலைநாட்டினார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
"அவன்தான் தன்னுடைய தூதரை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தான். ஏனைய (அசத்திய) மார்க்கங்களைவிட அதனை (தீனை) மேலோங்கச் செய்யவேண்டும் என்பதற்காக: இணைவைப்பாளர்களுக்கு இது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!" (61:09)
இறைத்தூதருக்குப் பிறகு தீனை நிலைநாட்டும் பணி இறை வழிகாட்டலை ஏற்று வாழும் முஸ்லிம் சமூகத்தின் மீது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"எந்த தீனை வாழ்க்கை நெறியை நூஹ_க்கு அவன் வகுத்தளித்திருந்தானோ மேலும் (முஹம்மதே) எந்த வாழ்க்கை முறையை உமக்கு நாம் வஹியின் மூலம் அறிவித்திருக்கின்றோமோ மேலும் எந்த வழிகாட்டலை இப்ராஹீம் மூஸா ஈஸா ஆகியோருக்கு நாம் வழங்கியிருக்கின்றோமோ அதே தீனை வாழ்க்கை முறையைத் தான் உங்களுக்காக அவன் நிர்ணயித்துள்ளான். இந்த தீனை நிலை நாட்டுங்கள். இதில் பிரிந்து போய்விடாதீர்கள் (எனும் அறிவுறுத்தலுடன்) இந்த இணைவைப்பாளர்களை நீர் எந்த விஷயத்தின் பக்கம் அழைக்கின்றீரோ அது அவர்களுக்கு மிகவும் வெறுப்புக்குரியதாய் இருக்கின்றது. தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தனக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும் எவர்கள் அவன் பக்கம் திரும்புகின்றார்களோ அவர்களுக்குத் தன்னிடம் வருவதற்கான வழியை அவன் காண்பிக்கின்றான்" (42:13)
எனவே தீன் என்னும் வாழ்க்கை நெறி:
- நம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவன் வழங்கியது
- இது முழுமையானது
- ஈருலக வெற்றி இதில் உள்ளது.
- நபிமார்களின் தலையாய பணியும் இதுவே.
- இறுதி தூதர்(ஸல்) தீன் என்னும் வாழ்க்கை நெறியை முழுமையாக நிலைநாட்டினார்கள்
- இப்பணி முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஒப்படைக்கப்பட்டுள்ளது
இத்துடன் ஓர் எச்சரிக்கை. அல்லாஹ் கூறுகிறான்:
"எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களிடம்; திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம்" (07:06)
எனவே தீனை நிலைநாட்டுதல் நமது விருப்பத்திற்கு விடப்பட்ட ஓர் பணியல்ல. மாறாக முஸ்லிம் சமுதாயம் மறைக்காமல், மறுக்காமல், கூட்டாமல், குறைக்காமல் உள்ளது உள்ளபடியே, முழு பொறுப்புணர்வுடன் திட்டமிட்டு, கூட்டு முயற்சியுடன் பாடுபட்டு நிலைநாட்ட வேண்டிய கட்டாய கடமை.
Back