إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ

...எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. ..." (அல்குர்ஆன் 13:11)

5. கல்வியின் முக்கியத்துவம்



கல்வி இல்லாமல் இஸ்லாம் இல்லை.

அண்ணலாருக்கு இறங்கிய முதல் வசனமே "இக்ரா" ஓதுவீராக".

கல்வியின் மூல ஆதாரம்(Fountain) திருக்குர்ஆன்தான். "அளவிலாக் கருணையுள்ள இறைவன் இந்தக் குர்ஆனை கற்றுத் தந்தான்" (55:1-2)

வாழ்க்கையின் நோக்கமும் அதனை அடையும் வழிமுறைகளுக்கான அடிப்படை கல்வியை பெறுவது ஒவ்வொரு ஆண், பெண் மீது கட்டாய கடமை.

இறைவன் நமக்களித்த அருட்கொடைகளில் மிகப்பெரும் அருட்கொடை கல்வியாகும். முதல் மனிதரான ஆதம் நபி(அலை) அவர்களை அல்லாஹ் படைத்தவுடன் மலக்குகளை அவருக்கு சஜ்தா செய்யச் சொன்னான். மலக்குகள் அந்த மனிதப் படைப்பின் சிறப்பை அறிய விரும்பிய போது எல்லா பொருட்களின் பெயர்களையும் சொல்லும்படி அல்லாஹ் ஏவினான். அவரும் அந்தப் பெயர்கள் அத்தனையையும் கூறினார். ஆக மனிதனைப் படைக்கும்போதே அவனுக்குக் கல்வியையும் கொடுத்து அல்லாஹ் படைத்தான். அப்படிப்பட்ட கல்வி ஞானத்தைக் கொடுத்துதான் தன் பிரதிநிதியாக மனிதனை இந்த உலகில் அனுப்பியிருக்கிறான்.

இந்தப் பரந்து, விரிந்த உலகில் மனிதனுக்கு என்னென்ன தேவையோ அவை அத்தனையும்; இறைவன் முழுமையாக கொடுத்திருக்கிறான். அது போலவே அறிவாற்றலையும் அவனுக்கு வழங்கியிருக்கிறான். ஒரு கொள்கை கோட்பாட்டில் ஒருவன் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அதைப்பற்றிய முழுமையான அறிவு அவனுக்கு வேண்டும். இல்லையென்றால் ஏதாவது ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அதை விட்டும் அவன் விலகிவிடநேரிடும். ஏனெனில் தெரியாத ஒரு விசயத்தில் மனிதன் இருப்பதற்கு சக்தி பெறமாட்டான்.

திருக்குர்ஆனில் மூஸா நபியைப் பார்த்து கிள்ரு அவர்கள் கேட்பதாக ஒரு வசனத்தை அல்லாஹ் கூறுகிறான். "மேலும் உமக்கு சரியாகத்தெரியாத விசயத்தில் எவ்வாறு உம்மால் பொறுமையாய் நிலைத்திருக்க முடியும்".(18:68). ஆக அறிவு ஞானம் இல்லாத ஒன்றில் நிலைத்து நிற்கவோ, சரிவர இயங்கவோ முடியாது.

கல்வி என்பது மனிதனை மனிதனாக, மனிதநேயமுள்ளவனாக, சீரான நேரான வளர்ச்சி பெற்றவனாக அவனை மாற்ற வேண்டும். அவனுடைய ஆளுமையை வெளிக் கொண்டு வரவேண்டும். அந்த ஆளுமை ஈமானில் தோய்த்து எடுக்கப்பட்டதாயிருக்க வேண்டும். அல்லாமல் வெறுமனே பொருள் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட கல்வியாக இருக்கக் கூடாது. நாம் கற்கும் கல்வி ஆன்மிகத்தையும், அறிவையும் ஒருங்கே பெற்றுத் தரவேண்டும்.

அடுத்தவரை அழிப்பதற்கு இந்தக் கல்வி பயன்படாமல் அவர்களுக்கு உதவுவதற்குப் பயன்படவேண்டும். ஆக்கப்பூர்வமானப் பணிகளுக்கு பயன்பட வேண்டுமே தவிர அழிபாதைக்கு இட்டுச் செல்லக்கூடாது.

கல்வியில் உலகக்கல்வி என்றும், மார்க்கக்கல்வி என்றும் எந்தப் பிரிவினையும் கிடையாது. நபி(ஸல்) அவர்கள் இறைவனிடம் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்பு தேடினார்கள் என்ற அடிப்படையில் பயனுள்ள கல்வி, பயனற்ற கல்வி என்று வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம். எல்லாக் கல்வி ஞானமும் இறைவனிடமிருந்து வந்தவைதாம். இறைவன்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஞானத்தைக் கொடுக்கின்றான். எனவே எல்லாவிதமான பயனுள்ள கல்வியையும் கற்பதற்கு முயலவேண்டும். இதுபோன்ற பயனுள்ள கல்வியைக் கற்பதற்கு முயலாமல் அதில் பொடுபோக்காக இருந்த காரணத்தினால்தான் இன்றும் முஸ்லிம் சமுதாயம் முன்னேறாமல் இருக்கின்றது.

இன்றைய உலகில் மக்கள் கல்விநிலையில் பல பிரிவுகளாக உள்ளனர். ஒரு பிரிவினர் முழுமையான அறியாமையில் இருக்கிறார்கள். அறிவைத் தேடவேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். மற்றொரு பிரிவினருக்கு அறிவு ஞானம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்து விடுகிறார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் “அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்து போயிருந்தார்கள்".(40:83) எனக் கூறுகிறான். இந்த நிலைமை இன்று முஸ்லிம்களிடமும் இருக்கிறது. முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாடுகளில் கொண்டு வரும் மேனாட்டுச் சட்ட திட்டங்கள், முற்றிலும் இஸ்லாத்திற்கு எதிரான பொருளாதாரத் திட்டங்கள், நாடு முன்னேற வேண்டுமானால் இஸ்லாமியச் சட்டங்களைக் கைவிட்டு மேலை நாடுகளின் சட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற இவர்களின் சிந்தனை. இவர்கள்தாம் குர்ஆன், ஹதீஸ் எனும் ஞானம் கொடுக்கப்பட்டும் அதைப் புறக்கணித்து விட்டவர்கள்.

மக்களின் இன்னோர் பிரிவினரும் உண்டு. ஒருவருக்கு ஒருவர் தர்கித்துக் கொண்டு தாங்கள் சொல்வது மட்டும்தான் சரி மற்றவையெல்லாம் தவறு என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: "மனிதர்களில் சிலர் இவ்வாறு இருக்கிறார்கள். அவர்கள் ஞானம் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கிறார்கள். மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறார்கள்."(22:03) ஆக இப்படியும் ஒரு பிரிவினர் மனித சமுதாயத்தில் எல்லா காலகட்டத்திலும் இருந்து வருகிறார்கள்.

மற்றோர் பிரிவினரும் உண்டு. இவர்கள் உண்மையான சத்தியத்தைத் தேடுகிறோம் என்ற பெயரில் அசத்தியத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். இருளிலே சென்று சத்தியத்தின் ஒளியைத் தேடுகிறார்கள். இறுதியாக ய10கத்தின் அடிப்படையில் தம் மனம் சொல்கின்றபடி ஒரு கொள்கையில் சென்று விடுகிறார்கள். இவர்களைப் பற்றியும் அல்லாஹ் சொல்கிறான். "நீங்கள் கற்பனையின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்".(6:148). எனவே இவர்கள் தாங்களாகவே ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவர்களல்லாமல் மேலும் ஒரு பிரிவினர் உண்டு. இவர்கள் உண்மையிலேயே அறிவு ஞானம் பெற்றவர்கள். அறிவு ஞானம் பெற்றவர்கள் அதிக நன்மை பெற்றவராவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான், "தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர்(மெய்யாகவே) எராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள்." (2-269) எனவே அல்லாஹ் விடமிருந்துதான் ஞானம் கிடைக்கிறது. அவனிடம் பெறப்படும் அறிவு ஞானம் மட்டுமே சரியானது, நிலையானது. அப்படியான அறிவு ஞானம் பெற்றவர் உண்மையிலேயே அதிக நன்மைகள் பெற்றவராவார். எனவே அறிவு ஞானம் என்பது கட்டாயமாகப் பெறவேண்டிய ஒன்றாகும்.

கல்வி இல்லாதவர்கள் குருடர்களைப் போலத்தான். அல்லாஹ் சொல்கிறான், "மேலும் பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாக முடியாது".(40:58) இந்த வசனத்தில் அறிவு ஞானம் இல்லாதவரையே பார்வையற்றவர் எனச் சொல்லப்படுகிறது. எனவே கண்டிப்பாகக் கல்வி ஞானம் நமக்கு வேண்டும்.

அறிவு ஞானத்தைக் கட்டாயமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள். "இரவின் ஒரு சிறுபகுதியில் கல்வி கற்பது, இரவு முழுவதும் விழித்திருந்து இறைவணக்கம் புரிவதை விடச் சிறந்ததாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: மிஷ்காத், அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்(ரலி))

"அறிவு நுட்பம் என்பது அறிவாளியின் கை விட்டுப்போன பொருளாகும். அதை எங்கு கண்டாலும் அதை பெற்றிட அவர் உரிமையுள்ளவராவார்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி, அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).

மேலும் கூறினார்கள், "இறைவன் ஒருவனுக்கு நல்லதை நாடிவிட்டால் அவனுக்கு தீனை(வாழ்க்கை நெறியை)ப் புரிந்து கொள்ளும் கல்வியை அவனுக்கு கொடுக்கிறான்". (நூல்: புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர்: முஆவியா(ரலி).

"எவரொருவர் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ அவருக்கு சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் லேசாக்கிவிடுகிறான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம், அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).

மேலும் மற்றொரு அறிவிப்பில், "கல்வியைத் தேடி எவர் செல்கிறாரோ அவருக்கு சுவனத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் லேசாக்குகிறான். மேலும் அவருக்காக வானவர்கள் இறைஞ்சுகிறார்கள். அவர்களின் இறக்கைகளை பணிக்கிறார்கள். சுவனவாசிகள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள் கடலில் வாழம் மீன்கள் உள்பட அவருக்காக பாவமன்னிப்பு தேடுகின்றன". (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், "இறைவனின் ஞானம் இந்த பூமியில் மழையைப் போல பொழிகின்றது. மழை நீரை பெற்றுக் கொள்ளும் ஒரு பூமி மிகக் கடினமுடையதாக, பாறைபாங்கானதாக உள்ளது. எனவே அது அந்த நீரை தன்னுள் எடுத்துக் கொள்ளாது, அதை தன் மேல் தேக்கியும் வைத்திருக்காது, எனவே அந்த நீர் நேராகக் கடலில் சென்று கலந்து விடும். மற்றொரு பூமி தன்னுள் அந்த நீரை எடுத்துக் கொள்ளாமல் அப்படியே தன்மேல் தேக்கி வைத்துக்கொள்ளும். அந்த நீரிலிருந்து அதைச் சுற்றியுள்ள தாவரங்கள், கால்நடைகள், மனிதர்கள், பயன்பெறுகின்றனர். மூன்றாவது பூமி வளமான பூமி! அது தன்னுள் அந்த நீரை எடுத்துக்கொண்டு அதன் மூலம் புற்பூண்டுகளையும், மரம், செடி, கொடிகளையும் முளைக்கச் செய்து மற்றவர்களுக்கு அது பலாபலன்களைக் கொடுக்கிறது. இது போலவே மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர்.

முதல் வகையினர்: கல்வி ஞானத்தைப் தாங்களும் பெற்றுக் கொள்வதில்லை. மற்றவர்களுக்கும் இவர்களால் பயன் இல்லை.

இரண்டாம் வகையினர்: கல்வி ஞானத்தைப் பெற்றிருந்தும் தாம் பயன் அடையாமல்; மற்றவர்களுக்குப் பயன் தருபவர்கள்.

மூன்றாவது வகையினர்: இவர்கள் கல்வி ஞானத்தின் மூலம் தாங்களும் பயன் பெறுவார்கள். மற்றவர்களுக்கும் பயன் அளிப்பார்கள்".

ஆக நாம் இந்த மூன்றாவது பிரிவினர்களாக இருக்கவேண்டும். நாமும் பலன் பெற வேண்டும். நம் மூலம் மற்றவர்களும் பலன் பெறவேண்டும். நாம் இப்போது இது போன்ற கல்வியை யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும்?

அல்லாஹ் கூறுகின்றான்: "நம் வேதவசனங்களை ஓதி உணர்த்துபவரும், உங்க(ள் வாழ்க்கை நடைமுறைக)ளைத் தூய்மைப்படுத்துபவரும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிப்பவரும், நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களிடம் அனுப்பிவைத்த போது நீங்கள் பெற்ற அருட்கொடையைப் போன்றதாகும் இந்தக் கொடை".(2:151)

நாம் பெற வேண்டிய ஞானத்தைப் பெற்றுக் கொள்ளும் முதல்வழி நபி(ஸல்) அவர்கள்தான். அவர்கள் சொல்லித் தந்த விசயங்கள், நடைமுறைப்படுத்தியவை எல்லாவற்றையும் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே நாம் செய்ய வேண்டியது, வஹியின் முலம் நபி(ஸல்) அவர்கள் எவற்றைப் பெற்றார்களோ அவற்றைக் கற்றுக் கொள்ள நாம் முயலவேண்டும். இறைவனிடம் அதிகமாக துஆச் செய்யவேண்டும்.

"என் இறைவனே! எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக என்றும் இறைஞ்சுவீராக" (20:-114) என அல்லாஹ் சொல்வது போல் நாம் பிரார்த்தனை புரிய வேண்டும்.

நம் வாழ்வில் அன்றாடம் குர்ஆன், ஹதீஸை அதிகமதிகம் படிக்கவேண்டும். அப்படிச் செய்தால் நம்முடைய கல்வி ஞானம் அதிகமாகும். அல்லாஹ் அத்தகைய நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!!!

வாருங்கள் தினமும் திட்டமிட்டு சற்று நேரத்தை ஒதுக்கி

  1. திருக்குர்ஆனைப் பொருள் அறிந்து ஓதுவோம்.
  2. நபிமொழிகளை கற்போம்.
  3. அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றை படிப்பினை கண்ணோட்டத்தில் வாசிப்போம்.
  4. திருக்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் எழுதப்பட்ட நூல்களையும், வெளிவரும் பத்திரிக்கைகளையும் வாசிப்போம்.

இதன் மூலம் நமது கல்வி ஞானத்தையும் நற்செயல்களையும் அதிகரித்து இறை உவப்பை பெறுவோம்.


Back